Saturday, April 19, 2014

AndaLum - AzhvArkaLum.

ஸ்ரீ: 

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

''அஞ்சுகுடிக்  கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம்செயலை 
விஞ்சி நிற்கும் தன்மையளாய் பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை '' என்று மாமுனிகள் விருது கொடுக்க, ஆண்டாள்  தானும் திருப்பாவை பிரபந்தத்தைக் கொண்டு  அத்தை நிரூபித்திருக்கிற படியை இங்கே விளக்கமாகக் காண்போம் :

''குல விச்சை கல்லாமல் பாகம் படும்''  என்பதற்கு ஏற்ப, மங்களாசாசனத்தில் எம்பெருமானுக்கு யாரால் என்ன வந்துவிடுமோ என்று  அஞ்சுகின்ற குடி அழ்வார்கள் குடி. ஆனால் ஆண்டாளோ அவ்வாழ்வார்களைக் காட்டிலும் ஒருபடி மேலாய்  பகவத் பாகவத சமிர்திரேகப் பிரயோஜனையளாய் இருக்குமவள் எனலாம், இனி வருமவை கொண்டு.

பெரியாழ்வார் :

பெரியாழ்வாரைப் போலே ஆண்டாளும் மங்களாசாசன தத்பரதையில் ஊன்றினவள்.

அவர் ''உன்சேவடி செவ்வி திருக்காப்பு'' என்றார். 

           இவள் ''அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி'' என்றாள். 

அவர் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கும் திவ்யாயுதங்களுமான ஸ்வரூப நிரூபகங்களுக்கு பல்லாண்டு பாடினார். 

           இவள் நிரூபித ஸ்வரூபகங்களான குணங்களுக்குப்  பல்லாண்டு பாடினாள். 

அவர் ''அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு '' என்று தனக்கும் அவனுக்குமாக, ஒரு வகையிலே ஸ்வார்த்ததையா பல்லாண்டு பாடிக்கொண்டார்.   

            இவளோ ''உன்சேவகமே ஏற்றிப் பறை கொள்வான்  இன்றுயாம் வந்தோம் இரங்கு'' என்று பரார்த்தமான  அவனுடைய இரக்கத்துக்குப் பல்லாண்டு பாடினாள்.

முதலாழ்வார்கள் :

''வெய்ய கதிரோன் விளக்கு'', ''ஞான சுடர் விளக்கு'' ஆகிற ஒளிகளிலே திருவையும், எம்பெருமான் திருமேனியையும்  கண்டவர்கள் முதலாழ்வார்கள். ஆண்டாளும் ''மதிநிறைந்த நன்நாள்'' என்று திங்கள் ஒளியில் திங்கள் திருமுகத்தானைக் கண்டவள். 

திருமழிசை ஆழ்வார் :

''இவர் உறையில் இடாதவர்'' என்ற பெயருடன் பரதவ நிர்ணயத்தில் ஊற்றத்தோடு விளங்கியவர். ஆண்டாளும் திருப்பாவை முதல் ஐந்து பாசுரங்களால் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்சாவதாரங்க்களைப் பேசி, எடுத்து கழிப்பதற்குக் கூட தேவதாந்தரங்களைக் குறிப்பிடாதவள் எனலாம்.

நம்மாழ்வார் :

''கிருஷ்ண திருஷ்ணா தத்வமான'' இவருக்கு நாராயண நாமம் நாவகார்ய மன்று சுகார்யமே. ஆண்டாளுக்கோ ''நாராயண நாமம்'' சிறுபேராகிறது. கோப ஜன்மத்தை ஆஸ்தானம் பண்ணின உறவுமுறைகுச் சேர, ஸௌலப்ய விஷய நாமமான ''கோவிந்த நாமம்'' இவளுக்கும் கண்ணனுக்குமாய் உகந்த திருநாமமிறே.

குலசேகர ஆழ்வார் :

ராமாவதாரத்தில் அதிப்பிராவண்யமுடையவர் குலசேகர ஆழ்வார். அதுபோல கிருஷ்ண பக்தையளான ஆண்டாளும்  ராமனை ''மனத்துகினியான்'' என்று  பேசியிருப்பது, குலசேகர ஆழ்வார் வழித் தோன்றலாய்க் கொண்டே எனலாம். 

தொண்டரடிப் பொடியாழ்வார் :

இவர் திருவரங்க நாதனுக்குத்  ''திருப்பள்ளி எழுச்சி'' பாடினார். ஆண்டாளோ வேதம் வல்லார்களுக்கும், விண்ணோர் பெருமானுக்கும், புருஷகார பூதையான பிராட்டிக்குமாய் துயில் உணர்த்தி பாகவத ஸுப்ரபாதம் பாடி ஒருபடி மேலே நிற்கிறாள்.

திருப்பாணாழ்வார் : 

''ஆபாத சூடம் அநுபூயம்'' என்று அரங்கன் திருப்பாத கேசத்தைப் பாடினார் திருப்பாணாழ்வார். ஆண்டாளும் ''பரமன் அடிபாடி'' என்று தொடங்கி ''ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்'' என்று ஆபாத மஸ்தகம் அநுபவித்தாளாகிறாள்.

திருமங்கை ஆழ்வார் :

இவர் திவ்ய தேசங்கள் தோரும் யாதிரையகச் சென்று பகவத் விஷயமான பதிகங்களைப் பாடினார். ''வெண்சங்க மொன்றேந்திய கண்ணா நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே'' (பெரிய திருமொழி 7-10-10) என்று பேச, திருக்கண்ண மங்கை பத்தராவிப் பெருமாள் பெரியவாச்சான் பிள்ளையாகவும், திருமங்கை ஆழ்வார் ''கலிகன்றி தாஸர்'' என்ற பெயரோடே நம்பிள்ளையாயும் அவதரித்து சிஷ்ய விருத்தியைப் பண்ணினான் என்பது குபரம்பரை. அரசிளம் குமரர்கள் உணவில் பிடிதோறும் நெய் சேர்க்குமா போலே , திருமங்கை ஆழ்வார் தம் பாசுரங்களில் அடிதோறும் அர்ச்சை சேர்ப்பார் என்பது பூர்வாச்சார்ய வசனம்.
அதுபோலே ஆண்டாள்தன் திருப்பாவையில், அவள் நினைத்தோ நினையாமலோ பல 
திவ்யதேச எம்பெருமான்கள் அந்தந்த பாசுரங்களை தந்தமக்கு ஆக்கிக் கொண்டமை 
நேர்த்தியோடு பொருந்தி வருவதும், தமிழ் பிரமாணங்கள் பின்னே அவ்வவ் எம்பெருமான்கள் செல்வார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இதோ :

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் :

மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.
வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.
ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.
ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .
மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .
புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.
கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.
கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - பெருமாள் கோயில், காஞ்சி 
தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை. 
நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.
கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.
கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம். 
புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.
உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.
எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.
நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.
அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.
உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.
குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.
முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.
ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.
அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.
மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.
அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.
ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ண புரம்.
மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - வடபெரும்கோயில் உடையான் (ஸ்ரீ வில்லி புத்தூர்).
கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - திருவேங்கடம்.
கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - விருந்தாவனம்.
சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - துவாரகை.
வங்கக் கடல் - அணிபுதுவை - ஸ்ரீவில்லி புத்தூர்.   
(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

 மதுரகவி ஆழ்வாருக்கு முன்னோடியாய் சரமபர்வ நிஷ்டையில் நின்ற ஆண்டாள் தானும் துணைக் கேள்வி அனுபவத்துக்காக தன்னோடொத்த சிறுமிகளை அவரவர் திருமாளிகைகுச் சென்று துயில் உணர்த்தி ''பாகவத ஸுப்ரபாதம்'' பாடினாள், ''பாராத்யம் ஸ்வம்'' என்று ஸ்வஸ்வரூப-பரஸ்வரூப விக்ஞாபனம் பண்ணி, பகவானுக்கே  அத்தியாபகை ஆனாள்,இப்படி ஆழ்வார்கள் தனித்தனயே செய்த ஒவ்வொன்றும் இவள் ஒருத்தியே செய்து காட்டினாளாகில், இவளுக்கும் ஏனைய ஆழ்வார்களுக்கும் பர்வத-பரமாணு ஓட்டை வாசிபோலும் என்ற பெரியவாச்சான் பிள்ளை கூற்று மெய்க்கூற்றாகும் அல்லவே?


--தாசரதி தாஸன், கிடாம்பி ஸ்ரீநிவாஸரங்கன் ஸ்ரீனிவாச தாஸன்.

நாம் (தேஹாத்மாபிமானிகள்) (Knowing & realization):

ஒன்பது வாயில் ஒளிமதிக் கூரைவேய்
பன்முகப் பற்றுடை இத்தேகம் -- துன்பத்
துறை கோயில் இஃதின் பிரிது உயிர்என்
உறைப்பில் உணர்வு பழுது.

பர்வத பரமாணு ஓட்டை வாசி:

அதுஅறிந்தார் காண்முனிகள் ஞானத் துயர்வால்
பதுமத்தாள் மால்காதல் மிக்க -- மதிநலத்
தாழ்வாரின் ஒக்குமோ? மங்களத் தோங்குபெரி
யாழ்வாரின் ஆமோ அவர்?

எடுத்துக் கழிகிகத் தோதில்லை:

அப்பெரி யாழ்வாரும் தம்மகளார் ஆண்டாளுக்
கொப்போ எனப்பேசில்  அன்றுகாண் -- தப்பாது
நம்மைத்தாள் சேர்த்துமாலுக்   காட்படுத்தும் ஆசான்வாய்
தம்மையவள் முன்நிறுத்த லால்.